அலாவுதீன் கில்ஜியிடம் பிடிபட்ட 8000 மங்கோலியர்கள்

மங்கோலிய சாம்ராஜ்யம் முடிவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர் அலாவுதீன் கில்ஜி. உலகத்தையே வென்ற மங்கோலியர்களின் வீரம், போர் தந்திரங்கள் எதுவும் அலாவுதீன் கில்ஜியிடம் எடுபடவில்லை.அடுத்தடுத்த 2 போர்களில் அலாவுதீன் கில்ஜியிடம் தர்ம அடி வாங்கிய மங்கோலியர்கள் சரியான நேரத்தை பார்த்து 3வது போரை தொடங்கினர்.போர்க்களத்தில் எதிரிகளை வெட்டிச்சாய்ப்பவன் வீரன், தன்னை விட எதிரியின் பலம் பல மடங்கு இருந்தாலும், வெல்பவனே சிறந்த அரசன். அலாவுதீன் கில்ஜி, சிறந்த வீரனாக மட்டுமல்லாமல், தலைவனாகவும் இருந்தார். தோல்விக்கு சூழ்நிலைகளை காரணம் சொல்லாமல், தனக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டவர். அதனை நிரூபிக்க மங்கோலியர்கள் மீண்டும் ஒரு முறை வாய்ப்புக் கொடுத்தனர்.1302 – 1303 காலக்கட்டத்தில் வாரங்கல், சித்தூர் படையெடுப்புகளை அலாவுதீன் கில்ஜி மேற்கொண்டார். இதனால் டெல்லியில் குறைவான படைகளே இருந்தன. இதனைத் தெரிந்து கொண்ட மங்கோலிய தளபதி தர்கி, 1 லட்சத்து 20 ஆயிரம் வீரர்கள் அடங்கிய பெரும்படையுடன் டெல்லி புறப்பட்டான். அவன் வரும் தகவல் அறிந்து, அதற்கு சற்று முன் அலாவுதீன் கில்ஜியும் டெல்லி விரைந்தார். டெல்லி அருகே தனது பாசறையை அமைத்தார். அதே நேரம் அவர் பிற பகுதிகளில் இருந்து படை திரட்ட முடியாதவாறு, மங்கோலியர்கள் அனைத்து வழிகளையும் அடைத்தனர். டெல்லிக்கு வந்த உணவுப்பொருட்களும் தடை செய்யப்பட்டன. அலாவுதீன் கில்ஜி எதிர்பார்த்த படைகள் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து வந்து சேர முடியாமல் போனது.

கிட்டத்தட்ட முற்றுகையிடப்பட்ட நிலையில் டெல்லி சென்றது. இந்த முறை நிச்சயம் டெல்லி விழுந்து விடும் என்றே அனைவரும் நம்பினர். ஆனால் அலாவுதீன் கில்ஜி, எதற்கும் அசரவில்லை.அம்புகள் தாக்காத வண்ணம் பாசறைக்கு முன் மரப்பலகைகளால் சுவர் அமைத்தார். பாசறையை சுற்றி, அகழி தோண்டினார். அகழியின் மேல் பெரிய யானைகளில், வீரர்களை அமர்த்தி கண்காணித்தார். இதனால் மங்கோலியர்களால் கில்ஜி படைகளை நெருங்க முடியாமல் போனது. எனினும் அதற்கான வாய்ப்பை பெற அவர்கள் முயற்சித்து தோல்வி கண்டனர். சுமார் 2 மாதங்கள் காத்திருந்த மங்கோலியத் தலைவன் தர்கி, பின்னர் வேறு வழியின்றி, திரும்பிச் சென்றான். இந்தப்போரின் மூலம் அலாவுதீன் அதிசய மன்னனாக பார்க்ப்பட்டார்.தொடர் மங்கோலியப் படையெடுப்பின் மூலம் பாடம்கற்ற அலாவுதீன் கில்ஜி ராணுவத்தில் பல நவீனங்களை புகுத்தினார். வழிநெடுகிலும் உள்ள கோட்டை கொத்தளங்களை பலப்படுத்தினார். வீரர்களின் எண்ணிக்கையை உயர்த்தினார். இருந்தும் அடுத்த ஆண்டே அதாவது 1304ஆம் வருடம் மீண்டும் 4வது முறையாக வந்த மங்கோலியப்படைகள் பெரிய சேதாரம் இன்றி உயிர் பிழைத்து ஓடின.ஆனால் மீண்டும், 5வது முறையாக 1305ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி டெல்லியை பதம் பார்த்துவிட வேண்டும் என்ற ஒரே முடிவில் மங்கோலிய முக்கியத் தலைவர்களான தர்க்கி, அலிபேக், தர்தாக் ஆகியோர் தலைமையில் சுமார் 50000 பேர் அடங்கிய மங்கோலியப் படை டெல்லி நோக்கி விரைந்தது.

அவர்களை விரட்டியடிக்க தனது இந்து தளபதியான மலிக் நாயக் தலைமையில் சுமார் 30 ஆயிரம் பேர் கொண்ட படையை அனுப்பி வைத்தார் அலாவுதீன் கில்ஜி. இந்தப் படை, மங்கோலியர்களை கங்கை கரையில் கசக்கி காயப்போட்டது. தர்க்கி அம்பு வீச்சில் பலியானார். மற்ற தளபதிகளான அலிபேக், தர்தாக் ஆகியோர் உயிருடன் பிடிபட்டனர். 20 ஆயிரம் குதிரைகள் பிடிபட்டன. 8000 மங்கோலிய வீரர்கள் உயிருடன் பிடிபட்டனர். அவர்களுக்கு டெல்லியின் வீதியில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கிழக்கே பசுபிக் பெருங்கடல் முதல் மேற்கே பாரசீக வளைகுடா வரை, எண்ணற்ற அப்பாவிகளின் ரத்தத்தை ருசித்து, ரசித்துக் குடித்து, இன்பம் அனுபவித்த, மங்கோலியர்கள் முதல் முறையாக தங்களது சக வீரர்களின் ரத்தம் டெல்லி வீதியில் ஆறாக ஓடியது கண்டு, மரணக் கூக்குரலிட்டனர். இந்தக் காட்சிகளை காண பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். இந்த போரில் பிடிபட்ட மங்கோலியத் தலைவர்கள் அலிபேக், தர்தாக் ஆகியோர் அலாவுதீனின் காலடியில் சரணடைந்து கில்ஜி படையில் இணைந்தனர். இவர்கள் மதுரை படையெடுப்பில் கலந்து கொண்டு, மதுரை வந்ததாகவும் வரலாற்று குறிப்புகள் உள்ளன.

மங்கோலியர்கள் தங்களை கான்களுக்கெல்லாம் கான் என அழைத்தனர். அதாவது அரசர்களுக்கெல்லாம் அரசர். அந்த கான்களை தன் காலடியில் போட்டு மிதித்து, அதன் மீது அரியணை அமைத்து அமர்ந்தவர் தான் அலாவுதீன் கில்ஜி. 5வது வெற்றி அலாவுதீன் கில்ஜிக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது. பிரமாண்டமாக விழா எடுத்துக் கொண்டாடினார். அதே நேரம் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற பாணியில் அடுத்த ஆண்டே 1306ஆம் ஆண்டு மீண்டும் மங்கோலியத் தலைவர் தாவாகான், தனது மகன் குபக் தலைமையில் டெல்லிக்கு படைகளை அனுப்பினார். அவர்களை மலிக் நாயக், மாலிக் துக்ளக் ஆகியோர் தலைமையிலான கில்ஜிக்களின் படை எதிர்கொண்டு, புறமுதுகிட்டு ஓடச் செய்தது. இந்தப் போரில், மங்கோலியத் தலைவர் தாவாகானின் மகன் குபக் கொல்லப்பட்டார். இந்த தோல்வி மங்கோலியர்களின் இறுதி அத்தியாயத்தை எழுதியது.

அந்த ஆண்டே தாவாகான் மறைந்தார். இது மங்கோலியர்களிடையே நிலையற்ற தன்மையை உருவாக்கியதால், அவர்கள், இந்துஸ்தானத்தின் மீது கவனம் செலுத்தவில்லை. இதனைப் பயன்படுத்தி, கில்ஜியின் படைகள், தற்போதைய ஆப்கானிஸ்தானில் உள்ள கஜினி, காபூல் நகரங்களில் தங்களின் வெற்றிக் கொடிகளை நாட்டின.இத்தகைய பெரும் போர்களை எதிர்கொண்டு, இந்துஸ்தானத்தை காத்தவர் தான் அலாவுதீன் கில்ஜி. ஆனால், அவர் அடுத்தவரின் மனைவிக்காக ஏங்கி, 24 மணி நேரமும், அவருக்காகவே கனவு கண்டு, அதற்காக தனது படை நடத்தி, அப்பாவி பெண்கள் தீக்குளிக்க காரணமாக இருந்தார் என பத்மாவத் என்ற பெயரில் அபாண்டமாக திரைப்படம் எடுத்திருப்பது, நகைச்சுவையிலும் நகைச்சுவை.அலாவுதீன் கில்ஜி குறிவைக்கப்பட காரணம் அவர் இஸ்லாமிய சமயத்தைச் சார்ந்தவர் என்பது மட்டுமே. ஆனால் அவர் வாழ்க்கை முழுவதும் அனைத்து மக்களுக்குமான இந்துஸ்தானின் நேர்மையான ஆட்சியாளராக மட்டுமே இருந்தார்.