உலகத்தையே நடுநடுங்க வைத்த மங்கோலியர்கள்

20 ஆயிரம் மங்கோலியர்களை கைதிகளாக பிடித்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அலாவுதீன் கில்ஜி!மங்கோலியர்கள் தங்களை கான்களுக்கெல்லாம் கான் என அழைத்துக் கொண்டனர். அதன் அர்த்தம், அரசர்களுக்கெல்லாம் அரசன். ஆனால் அந்த கான்களையே தனது காலடியில் போட்டு மிதித்து, அதன் மீது அரியணை போட்டு அமர்ந்தவன் தான் மாவீரன் அலாவூதின் கில்ஜி. இந்திய தேசியவாதிகளால் கொண்டாடப்பட வேண்டிய ஒரு மாவீரன் அலாவூதீன் கில்ஜி. ஆனால் கெடுவாய்ப்பாக, அவனது புகழ் மறைக்கப்பட்டதோடு, அரக்கனமாகவும் சித்தரிக்கப்படுவது வேதனை.மங்கோலியர்கள் தங்களை அரசர்களுக்கெல்லாம் அரசன் என்று அழைக்க ஒரு காரணம் இருந்தது. அவர்கள் ஒரு நாட்டின் மீது படையெடுத்தால், அதனை வீழ்த்தி விட முடியும் என்ற உளவுத் தகவல்களை பெற்று, அதனை உறுதி செய்த பிறகே படையெடுப்பார்கள். முதலில் எதிரி அரசனுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படும். அதாவது மங்கோலிய மேலாட்சியை ஏற்றுக் கொள்ள வேண்டும். கேட்கும் பணத்தை கொடுக்க வேண்டும். கேட்கும் படைகள், ஆயுதங்களை வழங்க வேண்டும்.இவை அனைத்திற்கும் ஒப்புக் கொண்டால், அந்த நாடு, செங்கிஸ்கானின் அடிமை நாடாக கருதப்பட்டு, அதற்கு பாதுகாப்பும் வழங்கப்படும். அந்த நாட்டை ஏதாவது படைகள் தாக்கினால், உடனடியாக மங்கோலியப் படைகள் அங்கு விரையும். நேரடியாக சொல்லப்போனால் செங்கிஸ்கானின் பினாமி அரசாக அந்த அரசுகள் விளங்கும். இதனை ஏற்றுக் கொள்பவர்கள் பிழைக்க முடியும். எதிர்த்தால், மரணம் பரிசாக கிடைக்கும். இத்தகைய சூழலில் தான் அலாவுதீன் கில்ஜி மங்கோலியர்களை எதிர்த்து வந்தான். டெல்லி அரியணையில் ஏறும் முன்பு 6 முறை மங்கோலியர்களை பல பகுதிகளில் விரட்டியடித்துள்ளான் அலாவுதீன் கில்ஜி. டெல்லி அரியணையில் ஏறிய பிறகு 6 போர்கள் நடைபெற்றுள்ளன. முதல் போர் இந்துஸ்தானத்தின் வரலாற்றை புரட்டிப்போட்ட போர். அதனை பார்க்கலாம்.

அலாவுதீன் கில்ஜியின் ஆட்சிக்கு முன் தற்போதைய பாகிஸ்தானின் சிந்து, லாகூர் பகுதிகள் மீதும், இந்தியா மீதும் பல முறை மங்கோலியர்கள் படையெடுத்தாலும், அவர்களின் எண்ணம் கொள்ளையடிப்பதாகவே இருந்தது. ஆனால் அலாவுதீன் அரியணை ஏறிய காலக்கட்டத்தில், மங்கோலியர்கள் டெல்லியை கைப்பற்றி, ஆட்சி நடத்த வியூகம் வகுத்திருந்தனர். அப்படிப்பட்ட அபாயகரமான சூழலில் தான் அலாவுதீன் கில்ஜி டெல்லியின் அரியணையை அலங்கரித்துக் கொண்டிருந்தான். 1297ஆம் ஆண்டு செங்கிஸ்கானின் மங்கோலிய பேரரசுக்கும், இந்துஸ்தானின் மாமன்னன் அலாவூதீன் கில்ஜிக்கும் இடையே முதல் பெரும்போர் வெடித்தது.
புகழ்பெற்ற மங்கோலியத் தலைவர்கள் தாவாகான், காதர் ஆகிய தளபதிகள், நன்கு பயிற்சி பெற்ற ஒரு லட்சம் பேர் கொண்ட சிறப்புப் படையுடன் டெல்லி நோக்கி விரைந்தனர். அவர்களை அழித்தொழிக்க உலூக்கான், ஜாபர்கான் ஆகிய இரு வீரத்தளபதிகள் தலைமையில் கில்ஜியின் படை போர்க்களம் புகுந்தது. இந்தப் போரில் உலகப் பேரரசர் செங்கிஸ்கானின் படைகளை துவைத்து தொங்கவிட்டது மாவீரன் கில்ஜியின் அசுரப்படை. மங்கோலியர்கள் பேய் அடித்தது போல் ஓட்டம் கண்டனர். பல்லாயிரக்கணக்கானோர் போர்க்களத்தில் துரத்தி துரத்தி கொல்லப்பட்டனர்.

சுமார் ஐந்தில் ஒரு பகுதியினர் அதாவது 20,000 மங்கோலியர்கள் இந்த போரில் கொல்லப்பட்டனர். பல நூறு பேர் கைதிகளாக பிடிக்கப்பட்டு டெல்லி அழைத்து வரப்பட்டனர். அங்கு மக்கள் முன்னிலையில் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இந்தக் காட்சிகளை கண்ட, கேள்விப்பட்ட மங்கோலியத் தலைவர்கள் திடுக்கிட்டனர். இந்துஸ்தானத்தின் சில ராஜபுத்திர அரசர்களோ, கில்ஜியை நினைத்து பெருமைப்பட்டனர்.சிலர் அச்சத்தால் வௌவௌத்தனர். இந்த பெரு வெற்றி இந்துஸ்தானத்தின் தவிர்க்க முடியாத மாமன்னன் என்ற பெருமையை அலாவுதீன் கில்ஜிக்கு வழங்கியது. இந்துஸ்தானத்தில் அவன் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்தது. தாங்கள் கட்டிக்காத்த பெருமையையும், புகழையும் ஒரே போரில் சிதைத்து, மண்ணில் புதைத்த அலாவூதின் கில்ஜியின் ரத்தத்தை குடிக்க வேண்டும் என சபதம் எடுத்தனர் மங்கோலியர்கள். எதிர்ப்பவர்களை உருத்தெரியாமல் அழித்தே பழகிப்போன மங்கோலியர்களுக்கு, அலாவுதீன் கில்ஜி கொடுத்த அடி, தூக்கத்திலும் திடுக்கத்தை ஏற்படுத்தியது. அதற்கு பழி தீர்க்காமல், சாப்பிடும் ஒவ்வொரு நேர சாப்பாடும், அவமானம் என கருதினர். எனவே ஒரே ஆண்டில் மீண்டும் இரண்டாவது போர் தொடங்கியது.