இன்று பூரண மதுவிலக்கு என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்பட்டிருந்போம். ஆனால் எங்கும் பூரண மதுவிலக்கு கிடையாது. மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலம் என்பார்கள். ஆனால், உயர்குடியினர், பணக்காரர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் மது விற்பனை செய்யப்படும் என அறிவிப்பார்கள். நம் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களே மது ஆலைகளை நடத்தி, அதன் வருமானத்தில் தேர்தல்களை சந்தித்து, மக்களுக்கு பணம் கொடுத்து, தேர்தலில் வெல்வார்கள். எனவேதான் மதுவிலக்கு என்பது சாத்தியமே இல்லாமல் தொடர்ந்து வருகிறது.அலாவுதீன் கில்ஜி ஆட்சிக் காலத்தில், மதுவிலக்கை பூரணமாக அமல்படுத்தினார். முதலில் அதற்கான காரணத்தை பார்க்கலாம்.மிகப்பெரிய எதிரிகளைக் கூட வீழ்த்திய பல மாவீரர்கள், உடன் இருப்பவர்களின் துரோகத்தால் வீழ்ந்த வரலாறுகள் உண்டு. இதற்கு அலாவுதீன் கில்ஜி மட்டும் விதிவிலக்கு அல்ல. அந்த வகையில், பல்வேறு ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகள் அலாவுதீன் கில்ஜிக்கு எதிராக, அவரது சொந்த உறவினர்களாலும்,படைத்தலைவர்களாலும், அதிகாரிகளாலும் நடத்தப்பட்டன. ஆனால் அவை அனைத்தையும் முறியடித்தார். இதுபோன்ற சூழலுக்கு என்ன காரணம் என அறிஞர் பெருமக்களை கூட்டி விவாதித்தார்.அடிக்கடி இப்படி உள்நாட்டுக் கலகம் ஏற்பட மதுப் பழக்கம் தான் காரணம் என ஆலோசனையில் கலந்து கொண்ட, இஸ்லாமிய அறிஞர்கள், கூறினார்கள். பணக்காரர்கள், பிரபுக்கள் அடிக்கடி மது விருந்து நடத்துகின்றனர். இந்த விருந்துகளில் போதையில், மனது போன போக்கில் பேசுகின்றனர். பின்னர் போதை தெளிந்த பிறகு, அதுவே அவர்களின் சதித் திட்டத்திற்கு அச்சாரமிடுகிறது என்று தெரிவித்தனர்.
எனவே மதுவிற்கு தடை விதித்தால், இதுபோன்ற உள்நாட்டுக் குழப்பங்களை தவிர்க்கலாம் என ஆலோசனை கூறினர். இந்த திட்டம் அலாவுதீன் கில்ஜிக்கு பிடித்துப் போக, மதுவை தடை செய்ய உத்தரவிட்டார்.முன்னதாக அலாவுதீன் கில்ஜியே பெரிய குடிகாரராகத் தான் இருந்தார். அவரை, சந்தித்த மார்க்க அறிஞர், காஜி முகிஸ் உத்தீன், நீங்கள் மதுப்பழக்கத்தை மட்டும் கைவிட்டால், சிறந்த அரசராக இருப்பீர்கள் என அடிக்கடி கூறி வந்தார். அதற்கான நேரம் வந்துவிட்டதாக உணர்ந்த அலாவுதீன் கில்ஜி, கண்ணாடி, பீங்கானில் செய்யப்பட்ட தனது சொந்த மதுக் கோப்பைகளை அரண்மனையின் முன் போட்டு உடைக்க உத்தரவிட்டார்.அவரது தங்கம் மற்றும் வெள்ளியில் ஆன மதுக்கோப்பைகளை உருக்கி நாணயம் அச்சடித்தார். பெரிய பெரிய ஜாடிகளில் வைக்கப்பட்டிருந்த மது, சாலைகளில் ஊற்றப்பட்டது. மதுக்கடைகள் இழுத்து மூடப்பட்டு, மது தெருக்களில் ஆறாக ஓட விடப்பட்டது. இதனால் டெல்லியின் வீதிகள் சில நாட்களாக சேரும் சகதியுமாக காட்சியளித்தன. மது தயாரிப்பவர்கள், விற்பனை செய்பவர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு, அரசிடம் அவர்கள் செலுத்த வேண்டிய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, டெல்லியை விட்டு வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
யானைகள் மூலம் தெருதெருவாக சென்ற அரசு அதிகாரிகள், மது தடை செய்யப்பட்ட செய்தியை மக்களுக்கு அறிவித்தனர். இந்த தடை குடிகாரர்களுக்கு பெரும் பிரச்னையாக இருந்தது. அவர்கள் மிகுந்த சிரமப்பட்டு, மதுப்பழக்கத்தை படிப்படியாக கைவிட்டனர். இதே போல் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களும் தடை செய்யப்பட்டன. கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சுவது, கஞ்சா விற்பது போன்ற குற்றங்களுக்கு கடுமையாக தண்டனைகள் வழங்கப்பட்டு, மது உள்ளிட்ட போதை பொருட்கள் முழுமையாக தடை செய்யப்பட்டதாக வரலாற்று ஆசிரியர்கள் புகழாரம் சூட்டுகின்றனர்.மது அருந்துதல், மதுவை விற்பனை செய்தல் ஆகிய குற்றங்களுக்கு, தண்ணீரில் முக்கியும், குழியில் தள்ளியும் மரண தண்டனை வழங்கப்பட்டது. இவர் விதித்த தண்டனைகள் கடுமையானதாக உள்ளதாக விமர்சிக்கப்பட்ட நிலையில், அதற்கு தனது ஆன்மீக வழிகாட்டி, மவுலானா காஜி முகிஸ் உத்தீனிடம் அலாவுதீன் கில்ஜி விளக்கம் அளித்தார்.மவுலானா அவர்களே, நான் இவ்வளவு கடுமையான தண்டனை விதித்தும், நாள்தோறும் தவறு செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. குற்றவாளிகள் தொடர்ந்து கூட்டம் கூட்டமாக என் முன் நிறுத்தப்படுகின்றார்கள், இறைவனின் பிள்ளைகளை திருத்தும் பணியில் யாருமே வெற்றி கண்டதில்லை. பிறகு நான் மட்டும் எப்படி வெற்றி காண முடியும் என கேள்வி எழுப்பினார் அலாவுதீன் கில்ஜி. அவரது கடும் தண்டனைகள் குற்றங்களை வெகுவாக குறைத்தன. ஒரு ஆட்சியாளன் மக்களுக்கு எந்த அளவிற்கு பாதுகாப்பு வழங்குகின்றானோ, அதே அளவிற்கு, அவர்களது வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த வேண்டும். இதனையும் வெற்றிகரமாக செய்து முடித்தார். அலாவுதீன் கில்ஜி. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்காக, விலைவாசி உயர்வை எப்படி கட்டுப்படுத்தினார் என்பதை, 9வது பாகத்தில் பார்க்கலாம்.






Leave a Reply