கஜினி முகமது சோமநாதபுரத்திற்கு படையெடுத்து கோவிலை தாக்கி அங்கிருந்த சிலையை எடுத்துச் சென்றார் என கஜினி முகமதுவின் அரசவை கவிஞர் பரூக்கி சிஸ்தானி குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தக் குறிப்பு தான் இன்றும் இந்திய அரசியலையே உலுக்கும் தகவலாக இருக்கிறது. இந்த தகவல் பல கலவரங்களுக்கும், வன்முறைகளுக்கும் கூட காரணமாக இருக்கிறது. ஆனால் இந்த தகவல் எவ்வளவு பலவீனமானது என்பதை ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. அப்போது தான் அமைதியான சமூகத்தை உருவாக்க முடியும்.
இறைத்தூதர் நபிகள் நாயகம் மக்காவை கைப்பற்றியபோது, அங்கு புனித பள்ளிவாசலான காபாவில் 300க்கும் மேற்பட்ட சிலைகள் இருந்தன. அவற்றை அரபிகள் கடவுளாக வணங்கி வந்தனர். யாருடைய கடவுள் பெரியது என பல போர்களே அங்கு நடைபெற்று முடிந்திருந்தன. இந்த நிலையில், அனைத்து சிலைகளையும் அங்கிருந்து அகற்ற நபிகள் நாயகம் உத்தரவிட்டார்.
இதில் 3 பெண் கடவுள்களின் சிலைகளும் அமைக்கப்பட்டிருந்தன. அவை அல் லாத், அல் உசா மற்றும் மனாட் ஆகியவை ஆகும். இந்த குறிப்புகள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே குர்ஆனில் குறிப்பிடப்பட்டவை ஆகும். எனவே இதில் முரண்பாடுகள் இல்லை.
அதே நேரம், மனாத் அங்கிருந்து உடைபடாமல் கடத்தப்பட்டு, குஜராத்தின் பிராபாசுக்கு அதாவது, சோமநாதபுரம் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள கோவிலில் வைக்கப்பட்டது என்பது தான் சிஸ்தானி தந்த முக்கியத் தகவல். அதற்கு பிறகு தான் அந்த கோவிலுக்கு மனாத் என்ற பெயரை தழுவி, சு மனாத் என பெயர் வைக்கப்பட்டது. பாரசீக இலக்கியங்களில் சோம்நாதபுரத்தை சு மனாத் என்றே பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
சு மனாத் என்றால், மனாத் இருக்கும் இடம் என அர்த்தம். இந்த சு மனாத் தான் சோம்நாத் என மருவியது என்கிறார் சிஸ்தானி. மனாத்தின் ஒரு பகுதி உடைந்து, மீதம் உள்ள பகுதி, லிங்கம் போல் காட்சியளித்தால், அது கோவிலில் வைத்து வணங்கப்பட்டதாக கூறுகிறார். முகமது கஜினியின் காலத்திற்கு பிறகு வந்த, மற்றொரு பாரசீக கவிஞரான அபுசயித் கர்தேசியும் இதனை உறுதி செய்கிறார். இந்த கூற்றில் சிறிதளவு நம்பகத்தன்மை இருப்பதாக பிரபல வரலாற்றாசிரியர் ரோமிலா தாப்பர் தெரிவிக்கிறார்.
கலீபாவிடம் நல்ல பெயர் வாங்கி தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக, கஜினி முகமது, மனாத் குறித்த கதையை தனது அரசவை கவிஞர் மூலம் பிரபலப்படுத்தியதாகவும், சோம்நாத் படையெடுப்புக்கு தகுந்த காரணம் வேண்டும் என்பதற்காக இதனைச் செய்ததாகவும் கூறுகிறார். கஜினி முகமதுவின் படையெடுப்புக்கு பின் நடைபெற்ற நிகழ்வுகளும், அவர் சிவலிங்கத்தை பெயர்த்து எடுத்துச் செல்லவில்லை என்பதை மறைமுகமாக உணர்த்துகின்றன. அதே நேரம் சிலை வழிபாட்டுக்கு எதிரானவனாக தன்னை கலீபாவிடம் காட்டிக் கொள்ள வேறு கோவில்களில் இருந்து சிலைகளை கஜினி முகமது உடைத்ததாக ரோமிலா தாப்பர் குறிப்பிடுகிறார்.
அதே போல் சோமநாதபுரத்திற்கு இந்துஸ்தான் எழுத்தாளர்கள் வழங்கும் பெயர் காரணங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இல்லை. அவர்கள் தரும் விளக்கங்களை காணலாம். சோபா நாதா புரம் என்பது தான் சோமநாதபுரம் ஆனதாக சொல்கிறார்கள். சோபா என்றால் சமஸ்கிருத்தத்தில் அழகு என்று பொருள். நாதா என்றால் கடவுள். சோபா என்ற வார்த்தை தான் காலப்போக்கில் சோமா என மாறியதாக கூறுகின்றனர். இது ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை.பிரபல பாரசீக கவிஞர் அல்ப்ரூனி, அளிக்கும் விளக்கம், சோமா என்றால் சந்திரன், நாதா என்றால் கடவுள். சந்திர கடவுள் என்பதே அதன் விளக்கம் என்கிறார்.இந்த இரண்டு விளக்கங்களை காட்டிலும் சூ மனாட் என்பது தான் சோம்நாட்டாகவும் பின்னர் சோமநாதபுரமாக மாறியது என்ற கூற்று, ஒப்பீட்டளவில் ஏற்றுக் கொள்ள கூடியதாக உள்ளது.
எனவே கஜினி முகமது சிலையை எடுத்துச் சென்றாரா என்பதற்கும் வலுவான ஆதாரங்கள் இல்லை. ஒரு வேலை அவர் எடுத்துச் சென்றிருந்தால், அது சிவலிங்கம் தானா என்ற சந்தேகமும் இதில் இருந்து ஏற்பட்டுள்ளது.






Leave a Reply