தனி பாலஸ்தீன நாடு தேவை என்றால், அதனை சவுதி அரேபியாவுக்குள் உருவாக்கிக் கொள்ளலாம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளதற்கு எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நெதன்யாகுவின் பேச்சு தரக்குறைவானது, சவுதி அரேபியாவின் இறையாண்மையை நேரடியாக தாக்கியுள்ளது. சவுதியின் பாதுகாப்பு என்பது, எகிப்து நாட்டுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. சவுதியை சீண்டுவது, எகிப்தை பொருத்தவரை சிவப்புக் கோட்டை தாண்டுவதாக அமைந்து விடும் என அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெதன்யாகுவின் பேச்சுக்கு பிரிட்டனில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நெதன்யாகுவின் பேச்சுக்கு நேரடியாக பதில் அளிக்க மறுத்த பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், பாலஸ்தீனியர்கள் தங்களது நிலத்தில் மறு கட்டமானம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். இரு நாடுகள் கொள்கை தான் இந்தச் பிரச்னைக்கு தீர்வு என டிரம்ப் மற்றும் நெதன்யாகுவின் கொள்கைகளை முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.

இதே போல் பல பிரிட்டன் ஆளும் கட்சி எம்.பி.க்களும் டிரம்ப் மற்றும் நெதன்யாகுவின் கருத்துக்களுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.இதுகுறித்து மிடில் ஈஸ்ட் ஐ ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள பிரிட்டன் லேபர் கட்சி எம்பியான அப்சல் கான், நெதன்யாகுவின் கருத்து, காட்டுமிராண்டித்தனமானது என்றும், பாலஸ்தீனியர்களுக்கு தேவை, சுதந்திரமான தாய்நிலம் எனக் குறிப்பிட்டுள்ளார்.இதனைக் கண்டித்துள்ள மற்றொரு லேபர் கட்சி எம்பியான கிம் ஜான்சன், நெதன்யாகுவின் கருத்து, அபத்தமான, அவமானகரமான ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.இதுகுறித்து கருத்து தெரிவித்த மற்றொரு பிரிட்டன் எம்.பியான அத்னான் ஹுசைன், நெதன்யாகு சர்வதேச நீதிமன்றத்தால், கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட ஒரு போர்க்குற்றவாளி, அவரது கருத்துக்கள் புறக்கணிக்கப்பட வேண்டும், தனி பாலஸ்தீன நாடு உருவாக வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.






Leave a Reply