பத்மாவத் திரைப்படத்தின் கட்டுக் கதைகள் ஒரு பார்வை

பத்மாவத் என்ற பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படத்தில் அலாவுதீன் கில்ஜியின் வரலாறு என்று கூறி பல அவதூறுகள் அள்ளித் தெளிக்கப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் விரிவாக ஆராயலாம். படத்திற்கு செல்லலாம்.ராணி பத்மாவதி மீது காதல் கொண்டு அலாவுதீன் கில்ஜி, சித்தூரையே அழித்ததாகவும், அப்பாவி பெண்கள் தீக்குளித்து மாண்டதாகவும் சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்ட பத்மாவதி, திரைப்படத்தின் கதை முழுக்க முழுக்க கட்டுக்கதையே ஆகும்.பத்மாவத் திரைப்படம் என்பது மாலிக் முகமது ஜெய்ஸி என்ற கவிஞர் எழுதிய பத்மினி காவியம் என்ற கற்பனை கவிதை தொகுப்பை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. இவர் வாழ்ந்த காலக்கட்டம் 16ஆம் நூற்றாண்டு. அலாவுதீன் கில்ஜியின் காலக்கட்டம் 13ஆம் நூற்றாண்டு அதாவது அலாவுதீன் கில்ஜி மறைந்து 200 ஆண்டுகளுக்கு பிறகு, இவர் தனது கவிதையை வடித்துள்ளார்.மாலிக் முகமது ஜெய்சி என்ற இஸ்லாமியர், அலாவுதீன் கில்ஜியைப் பற்றி ஏன் தவறாக எழுத வேண்டும் என்ற கேள்வி நியாயமானது தான். பாபர் காலத்தில், ராஜபுத்திரர்களிடம் சேர்ந்து கொண்டு, அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, அலாவுதீன் கில்ஜி மீது அவதூறு சுமத்தும் வகையிலும், ராஜபுத்திரர்களை புகழும் வகையில் ஜெய்சி கற்பனை கவிதை வடித்திருக்கலாம் என வரலாற்றாய்வாளர் செ. திவான் தனது அதிசய மன்னர் அலாவுதீன் கில்ஜி என்ற நூலில் தெரிவிக்கிறார்.

சரி அவதூறுகளுக்கு வருவோம்.அலாவுதீன் கில்ஜியின் காலக்கட்டம் 1296 முதல் 1316 வரை. அலாவுதீன் கில்ஜியின் சமகாலத்து அறிஞர்கள் யாரும் பத்மாவதி ராணியால் சித்தூர் படையெடுப்பு நடைபெற்றதாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.
இந்த சர்ச்சைகள் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நடத்திய ஆய்விலும், பத்மாவதி என்ற ஒருவர் இருந்ததற்கான வலுவான சான்றுகள் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.மாலிக் முகமது ஜெய்ஸி என்பவர் ஷேர் ஷா சூரி காலத்தில் வாழ்ந்தவர். அதாவது, அலாவுதீன் கில்ஜி, அதற்கு பிறகு துக்ளக் வம்சம், அதற்கு பிறகு சையது வம்சம், பிறகு லோடி வம்சம் அதற்கு பிறகு பாபர், அதற்கு பிறகு ஹூமாயூன் இதற்கிடையில் டெல்லியை ஆண்ட ஆட்சியாளர் தான் ஷேர் ஷா சூரி. இவருக்கு பிறகு மீண்டும் ஹூமாயூன் வருகிறார்.
இவரது கற்பனை கதையில், அலாவுதீன் கில்ஜியிடம் இருந்து தப்ப பத்மாவதி, ஹுமாயூனிடம் உதவி கேட்டதாக கதை புனைந்துள்ளார். அதுவும் சும்மா அல்ல. தன்னை சகோதரியாக ஏற்றுக் கொண்டு, தனக்கு உதவுமாறு, ராணி பத்மாவதி, ஹூமாயூனுக்கு ராக்கி கயிறு அனுப்பியதாகவும், அது தான் தற்போது, ரக்ஷா பந்தன் என கொண்டாடப்படுவதாகவும் கதை கட்டி விடப்பட்டு, இன்றும் வட இந்தியாவில் இந்தக் கதை நம்பப்படுகிறது.அதாவது 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அலாவுதீன் கில்ஜியை எதிர்க்க, 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹுமாயூனிடம் ராணி பத்மாவதி உதவி கேட்டதாக கதை எழுதியுள்ளார். இந்த கற்பனை கதையை வைத்துத் தான் 215 கோடி ரூபாய் செலவில் பத்மாவதி திரைப்படம் தயாரிக்கப்பட்டது.படத்தின் மேலும் சில அவதூறுகள்…

அலாவுதீன் கில்ஜி, திருமணத்தன்று, வேறு ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பது போன்றும், அதனை நேரில் பார்த்து, கண்டித்த அமைச்சர் ஒருவரை, அலாவுதீன் கில்ஜி கொலை செய்வது போன்ற காட்சிகளும் இடம்பெற்று இருக்கும். அலாவுதீன் கில்ஜியை இழிவுபடுத்த வேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்தை தவிர இந்த காட்சிகளுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. இதற்கொல்லாம் எந்த எதிர்ப்பும் எழவில்லை. இதில் வேடிக்கையிலும் வேடிக்கை என்னவென்றால், படத்தின் ஆரம்பத்தில், இது ஒரு கற்பனை கதை என்று டைட்டில் கார்டு போட்டிருப்பார்கள். படம் முடியும் போது, உண்மை வரலாறு என முடித்திருப்பார்கள். இதற்கும் கூட எந்த கேள்வியும் எழவில்லை.பத்மாவதி என்ற ராணிக்காக அலாவுதீன் கில்ஜி, சித்தூர் மீது போர் தொடுத்ததாக காட்டி இருப்பார்கள். உண்மையில் அந்த காலக்கட்டத்தில் பத்மாவதி என்ற அரசி சித்தூரில் வாழ்ந்ததாக எந்த சமகால வரலாறும் இல்லை.
அதே நேரம் சித்தூர் மீது கில்ஜி படையெடுத்தது உண்மை. அப்போது, சித்தூர் மன்னர் ரானா ரத்தன் சிங், போரில் தோற்று, கில்ஜியிடம் பிடிபடுவார். அவரை டெல்லி சிறையில் அடைத்து வைத்திருப்பார்கள். அலாவுதீன் கில்ஜியின் மகன் கிஸர்கான் சித்தூரை ஆட்சி செய்வார்.கில்ஜியின் மகன் கிஸர்கானின் ஆட்சி திறம்பட இல்லாததால், ரத்தன் சிங்கின் சகோதரி மகனை ஆட்சியாளராக நியமிக்கிறார் அலாவுதீன் கில்ஜி. இவர் போரின் போது, முன்கூட்டியே அலாவுதீன் கில்ஜியிடம் சரணடைந்ததால், அவருக்கு அமைச்சருக்கு உண்டான சலுகைகளை வழங்கி இருந்தார் அலாவுதீன் கில்ஜி.

ரத்தன் சேனின் மருமகன் சித்தூர் சென்று, ராஜபுத்திரர்களை தனக்கு சாதமாக திரட்டி, அங்கு ஆட்சி நடத்தினார். முதல் போருக்கு பிறகு, அதாவது, ரத்தன் சிங், டெல்லியில் இருந்து தப்பிய பிறகு, அலாவுதீன் கில்ஜி, சித்தூருக்கு மீண்டும் சென்றதாக எந்த வரலாற்றுக் குறிப்புகளும் இல்லை.பிறகு எப்படி, ராஜபுத்திர பெண்கள் தீக்குளித்தனர் என்ற கேள்வியை பல வரலாற்று ஆசிரியர்களும் எழுப்புகின்றனர். மேலும் ரானா ரத்தன் சிங்கின் மனைவிகள் யார் யார் என்பதிலும் பல முரண்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
மேலும் பத்மினி என்பவர் ரத்தன் சிங்கின் மனைவி அல்ல, மகள் என்றும் சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அந்த காலத்தில் ராஜபுதினத்தில், வீட்டு வீடு பத்மினி என்ற பெயர்கள் இருந்துள்ளன.விக்கிபீடியாவில் கூட பத்மினி என்ற அரசி வாழ்ந்ததாகவும், அவர் ரானா ரத்தன் சிங்கின் மனைவி என்றும் பொய்யை பச்சையைக எழுதியுள்ளனர். இதனை நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் படித்து வருகின்றனர்.அதே விக்கிப்பீடியாவில், பத்மினியின் தந்தை கந்தர்வசேனா என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி ஒரு பெயரில் 13ஆம் நூற்றாண்டில் இலங்கையில் எந்த அரசனும் வாழ்ந்ததாக குறிப்புகள் இல்லை. ஆனால் அப்படி ஒரு அரசன் வாழ்ந்ததாக பத்மாவதி படத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இப்படியாக முழுக்க முழுக்க கற்பனையாக கதை கட்டி, அதனை வைத்து, ஒரு தரப்பினருக்கு எதிராக வெறுப்பை கக்கியுள்ளனர்.
இன்னும் ஒருபடி மேலேபோய் சொல்லப்போனால், ஜெய்சி எழுதிய கற்பனை கதையையும் தாண்டி, ரானா ரத்தன் சிங்கை அலாவுதீன் கில்ஜி அநியாயமாக கொன்றது போன்ற திரைப்படம் எடுத்துள்ளனர்.ஜெய்சியின் கதையில், ரானா ரத்தன் சிங், பத்மினியை காப்பாற்ற தேவ்பால் என்ற மற்றொரு ராஜபுத்திர அரசனிடம் சண்டையிட்டு, இறந்ததாக எழுதப்பட்டுள்ளது.ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர்களை இரண்டு துண்டாக வெட்டிக்கொல்லும் தண்டனை வழங்கினார் அலாவுதீன் கில்ஜி. ஆனால், அவரே மாலிக் கபூர் என்ற அடிமையுடன் சல்லாபத்தில் ஈடுபடுவது போல் காட்சியாக்கியுள்ளனர்.இந்த திரைப்படம் ராஜபுத்திரர்களை இழிவு செய்வதாக கூறி, பெரிய போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் இஸ்லாமியர்கள் எந்தப்போராட்டத்தையும் நடத்தவில்லை. திரைப்படம் வெளியான பிறகு, ராஜபுத்திரர்களுக்கு ஆதரவாகவே படம் இருந்ததால், அவர்கள் அமைதி காத்தனர்.ஆனால் அலாவுதீன் கில்ஜி பற்றி பெரும் அவதூறுகள் சுமத்தப்பட்டிருந்தன. அதனை யாரும் கண்டிக்கவில்லை. காரணம் யாருக்கும் அலாவுதீன் கில்ஜியின் வரலாறு தெரியாது என்பது தான்.