அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுக்குள் வைப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பே அலாவுதீன் கில்ஜி மேற்கொண்ட, நடவடிக்கைகள், அவரது சிந்தனைகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.ஒரு முறை தனது அறையில் ஆழ்ந்த யோசனையில் இருந்த அலாவுதீன் கில்ஜியிடம், என்ன யோசித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில், இறைவன் எவ்வளவோ மனிதர்களை படைத்திருந்தாலும், அவர்களில் பெரும் பகுதியினருக்கு தலைவனாக என்னை ஆக்கி இருக்கின்றான்.
எனவே நான் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். எனது சொத்துக்கள் அனைத்தையும் மக்களுக்கே எழுதி வைத்து விடலாமா என சிந்தித்தேன். அதனால் எந்த பயனுமில்லை. காரணம் மக்கள் அனைவரது வறுமையை போக்கும் அளவிற்கு என்னிடம் சொத்துக்கள் இல்லை. எனவே மக்களின் அத்தியாவசிய தேவைகளை போக்க திட்டம் ஒன்றை வகுத்துள்ளேன். எனக் கூறி ஒரு திட்டத்தை முன்மொழிந்தார்.அந்த காலக்கட்டத்தில் நாயக் என்ற பிரிவினர், குதிரை, கழுதைகளில், நாட்டின் பிற பகுதிகளில் கிடைக்கும் பொருட்களை டெல்லிக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர்.
லட்சக்கணக்கான குதிரைகள் மற்றும் கழுதைகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு வந்தன. விலை தாறுமாறாகவும், நிலையற்றதாகவும் இருந்தது. இதனால் ஏழை எளிய மக்கள் பொருட்களை வாங்க முடியாமல் அவதியடைந்தனர். இந்நிலையில், அந்த நாயக்குகளை அழைத்து, அவர்களுக்கு ஆடை வழங்கி கவுரவித்து, அவர்களது வர்த்தகம் மற்றும் குடும்பச் செலவுகளுக்கு அரசின் கஜானாவில் இருந்து, கணிசமான முன்பணம் அல்லது ஊக்கப்பணம் வழங்கினார் அலாவுதீன் கில்ஜி.ஆனால், ஒரே நிபந்தனை, அவர்கள் டெல்லிக்கு கொண்டு வரும் பொருட்களின் விலையை அரசே நிர்ணயிக்கும் என்பது தான். இதனால் நாயக்குகளுக்கு லாபம் குறைந்தாலும், வியாபாரம் அதிகரித்தது. நஷ்டம் ஏற்படாதவாறு அரசும் உதவியது. ஏழை எளிய மக்கள் மிகக்குறைந்த விலையில் பொருட்களை வாங்கிக் சென்றனர். குறிப்பாக, துணி வகைகள், சர்க்கரை, நெய் ஆகியவற்றின் விலை கணிசமாக குறைந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு முறை பஞ்சம் ஏற்பட்டபோது, உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டால், விலையை உயர்த்தலாம் என ஒரு சில பொருளாதார ஆலோசகர்கள் யோசனை கூற, அவர்களுக்கு பிரம்படி தண்டனை வழங்கினார் அலாவுதீன் கில்ஜி. இந்த வர்த்தக விவகாரங்களை கவனிப்பதற்கு தாருல் அதல் என்ற துறையை நிறுவினார்.இதன் நோக்கம், பொருட்களின் தரத்தை பரிசோதிப்பது, எடை, நிறுவை அளவுகளை பரிசோதிப்பது, குறிப்பாக விலையை கண்காணிப்பது போன்றவை பணிகளாக இருந்தது. பல அடுக்கு கண்காணிப்பு அமைப்புகளை வைத்திருந்தார். ஒரு அடுக்கில் உள்ளவர்கள் தவறு செய்தால், அதனை பிறர் கண்டுபிடித்து, அரசிடம் சொல்லும் வகையில் சிறப்பான கட்டமைப்பை உருவாக்கி வைத்திருந்தார் அலாவுதீன் கில்ஜி.சீப்பு, கண்ணாடி முதல் குதிரை, உயர்ரக துணிகள் வரை அனைத்திற்கும் விலையை அரசே நிர்ணயித்தது. இப்போது இருப்பது போன்று, மக்கள் கூடும் இடங்களில் வாடகை இஷ்டத்திற்கு உயர்த்துவது, அதன்காரணமாக பொருட்களின் விலை பலமடங்கு உயர்வது போன்ற அடாவடிகளை அன்றே ஒழித்துக் காட்டியவர் அலாவுதீன் கில்ஜி.
பொருட்களின் விலை உயர்வு, பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகவும் சென்று கொண்டிருந்ததை தடுத்து நிறுத்தியவர் அலாவுதீன் கில்ஜி. பொருளாதார சீர்கேடுகளை தடுக்க கில்ஜி மேற்கொண்ட நடவடிக்கை, கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தது. எனவே அவரது பெயரை கேட்டாலே பொருளாதார மோசடி பேர்வழிகள் தலைதெறிக்க ஓட்டம் கண்டனர்.ஜோதிடம், மாயாஜாலம் எனச் சொல்லி மக்களை ஏமாற்ற நினைத்தால், அவர்களது கதி அதோ கதி தான். இதனால் ஜோதிடர்கள், தங்களுக்கு ஜோதிடம் தெரியும் என்பதையே மறைத்துக் கொண்டனராம். இப்படிப்பட்ட ஏழை, எளிய பாட்டாளிகளின் மன்னராக விளங்கிய அலாவூதின் கில்ஜியின் மீது தான் எத்தனை எத்தனை அவதூறுகள்…






Leave a Reply