தற்போதைய ஈரானில் உள்ள அழகிய ஊர் தான் நிஷாப்பூர். நீல பச்சை ரத்தினக்கற்களை உலகிற்கு வழங்கும் ரத்தின சுரங்கங்கள் மிகுந்த நகரம். அந்நகர் மங்கோலியர்களின் கரத்தில் வீழ்ந்தது. ஆட்சியாளராக செங்கிஸ்கானின் மருமகன் துக்குச்சர் என்பவன் அறிவிக்கப்பட்டான். அந்த வெற்றியை கொண்டாடும் முன்பே மர்ம நபரின் அம்பு வீச்சில் செங்கிஸ்கானின் மறுமகன் துக்குச்சர் கொல்லப்பட்டான்.இதனால் செங்கிஸ்கானின் செல்ல மகள் கடும் அதிர்ச்சியடைந்தாள். தனது மகளின் கண்ணீரை பார்த்த செங்கிஸ்கானின் கண்ணில் கண்ணீருக்கு பதில் எரிமலை குழம்பே பொங்கி வழிந்தது. அந்த நகரத்தை கொடூரமாக நிர்மூலமாக்க உத்தரவிட்டான் செங்கிஸ்கான்.அந்த நகரம் மற்றும் அதனை சுற்றியிருந்த பகுதிகளில் அப்போதே சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் தங்கள் வாட்களுக்கு காணிக்கையாக்கியது மங்கோலிய அரக்கப்படை.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் என அனைவரும் ஈவு இரக்கமின்றி, வெட்டி வீழ்த்தப்பட்டு, எரிக்கப்பட்டும், தாக்கப்பட்டும் கொல்லப்பட்டனர்.
தெருக்களில் ரத்தம் கரைபுரண்டு ஓடியது. கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள், நூலகங்கள், குடியிருப்புகள் மண்ணோடு மண்ணாக்கப்பட்டன. அப்போதும் வெறி அடங்கவில்லை. கொல்லப்பட்டவர்களின் எலும்புகளை மட்டும் வெட்டி எடுத்து, பிரமீடு அமைக்க உத்தரவிட்டான் செங்கிஸ்கான்.அவ்வாறே எலும்புகளை கொண்டே பிரமீடும் அமைக்கப்பட்டது. சில வரலாற்று ஆசிரியர்கள், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 17 லட்சம் என்றும், ஒரு மணி நேரத்தில் இவை அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டது என்றும் கூறுகின்றனர். ஆனால் இது மிகையானது, 5 லட்சம் பேர் மட்டுமே கொல்லப்பட்டனர் என்கிறது மற்றொரு வரலாற்று குறிப்பு. மக்கள் மட்டும் அல்ல, அவர்களின் செல்லப் பிராணிகளான நாய், பூனைக் குட்டிகள் கூட, வெட்டி வீசப்பட்டன.
இனி யாரும் மங்கோலியர்களை எதிர்ப்பது போன்று கனவுகூட காணக்கூடாது என்பதற்காக இதனைத் செய்தான் செங்கிஸ்கான். அவனது கனவுக்கு பலன் கிடைக்கவே செய்தது. இனி மங்கோலியர்களை எதிர்த்து, உயிர் தப்ப முடியாது என்ற முடிவுக்கு உலகின் பல மன்னர்கள் வந்தனர். பலர் செங்கிஸ்கானின் நண்பர்களாக மாறினர். பலர் செங்கிஸ்கானின் உதவியாளராக கூட மாறினர். சிலர் அவனுக்கு அடிமையாக கூட மாறினர்.






Leave a Reply