முகமது கோரி, ஹீரோவா, வில்லனா? – ராம்ராட் பிருத்விராஜ் திரைப்படத்தின் காட்சிகள் உண்மையா?

டெல்லி மன்னன் பிருத்விராஜுக்கும், முகமது கோரிக்கும் இடையே நடைபெற்ற போரை சித்தரிக்கும் ராம்ராட் பிருத்விராஜ் திரைப்படத்தின் கதை உண்மையா என பார்க்கலாம்.பிருத்விராஜின் இறப்பிற்கு பிறகு சுமார் 400 ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட பிருத்விராஜ் ரசோ என்ற கற்பனை இலக்கியத்தின் தழுவல் தான் இந்த திரைப்படம். படத்தில் காட்டப்பட்டுள்ள பல தகவல்கள் வரலாற்றுக்கு முரணானது என பெரும்பலான வரலாற்று ஆசிரியர்களால் தீர்மானிக்கப்பட்டது. அதே நேரம் பிருத்திவிராஜ் பற்றி சொல்வதற்கும் சிறப்பான செய்திகள் உள்ளன. முகமது கோரி பற்றிய பல அவதூறுகளுக்கும் விடை காணலாம்.முதலாம் தரையின் போர் தொடங்கியது. பிருத்விராஜ் தரப்பில், அவரது சகோதரரும், டெல்லி ஆட்சியாளருமான கோவிந்த் ராய் வீரமாக போரிட்டார். இவரை வீழ்த்துவதற்காக நேரடியாக கோரியே களத்திற்கு புறப்பட்டார். நேருக்கு நேர் கோவிந் ராயை சந்தித்த கோரி, தனது குத்தீட்டியை எரிந்தார். அது கோவிந்த் ராயின் இரண்டு பற்களை உடைத்துக் கொண்டு, கீழே விழுந்தது. மனம் தளராத பெருவீரன் கோவிந்த் ராய் தனது ஈட்டியை கோரியை நோக்கி வீசினான். அந்த ஈட்டி கோரி முகமதுவின் தோல்பட்டையை பதம் பார்த்தது. இதனால் குதிரையில் இருந்து கீழே விழுந்து நிலை தடுமாறிப்போனான் கோரி முகமது. கிட்டத்தட்ட இறந்து விட்டான் என்றே பார்த்தவர்கள் கருதினர்.
அவன் அந்த போரில் கொல்லப்பட்டிருந்தால், இந்தியாவின் பண்டைய வரலாறு வேறுமாதிரியாக மாறி இருக்கலாம். ஆனால் அதிர்ஷ்டம் அவனுக்கு கை கொடுத்தது. அல்லது இறைவன் அவனுக்கு மறு வாய்ப்பை வழங்கினான். கோரியின் நடவடிக்கைகளை கண்காணித்த, அவனது தளபது குத்புதீன் ஐபக், உடனடியாக குதிரையில் விரைந்து, கோரியை காப்பாற்றி, போர்க்களத்தில் இருந்து தப்பினான். ஆனால் இந்த சம்பவங்களை பிருத்திவிராஜ் திரைப்படத்தில் வேறுமாதிரி காட்டி இருப்பார்கள். அதாவது, கோரி முகமதுவை பிருத்விராஜ் வீழ்த்தியது போலவும், தன்னிடம் அகப்பட்ட கோரியை பிருத்திவிராஜ், உயிர் பிச்சை அளித்து விடுவித்தது போலவும் காட்டி இருப்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. குறிப்பாக பிருத்விராஜும் தனது ஆட்சி அதிகாரத்திற்கு இடையூறு செய்பவர்கள், சொந்தக் காரர்களாகவே இருந்தாலும் அவர்களின் தலையை கொய்தவனாகவே இருந்தான்.

உதாரணத்திற்கு, குர்கானை ஆண்டு வந்த பிருத்விராஜின் உறவினன் நகர்ஜுனா, பிருத்விராஜனுக்கு எதிராக கிளர்ச்சி செய்தான். குர்கான் கோட்டையை கைப்பற்றிக் கொண்டான். அவனை கைது செய்ய படைகளுடன் புறப்பட்டான் பிருத்விராஜ். பெரும்படையை கண்டு அங்கிருந்து தப்பி ஓடினான் நாகர்ஜுனா.ஆனால் நாகர்ஜுனாவின் தளபதி தேவபட்டா தொடர்ந்து போர் செய்தான். ஆனால் பிருத்விராஜ் வெற்றி பெற்றான். நாகர்ஜுனாவின் மனைவி, பிள்ளைகள், ஆதரவாளர்கள் அனைவரும் பிடிபட்டனர். பிடிபட்டவர்களின் தலைகளை கொய்து, தோரணம் கட்டி, அஜ்மீர் அரண்மனை வாயில்களில் தொங்க விட்டான் பிருத்விராஜ் எனக் குறிப்பிடுகிறது பிருத்விராஜ் விஜயம் நூல். இந்த பிருத்விராஜ் தான் முதலாம் தரையின் போரில், அந்நியன் முகமது கோரியை மன்னித்து விட்டதாக திரைப்படம் எடுத்து வைத்துள்ளனர்முதலாம் தரையின் போர்க்களத்தில் இருந்து, முகமது கோரி, அங்கிருந்து தப்பிய உடன், படைகளும் பின்வாங்கிவிடுகின்றன. இந்தப் போரில் பிருத்விராஜின் படையொடு ஒப்பிடும் போது, சிறிய படையாகவே கோரியின் படை இருந்தது.
எனினும் இந்த வெற்றி, பிருத்விராஜின் புகழை இந்துஸ்தான் முழுவதும் கொண்டு சென்றது.அந்த ஆண்டு இறுதியிலேயே இரண்டாம் தரையின் போர் தொடங்கியது. இந்த போர் தான் இந்துஸ்தானத்தில் குறிப்பாக டெல்லியின் ஆதிக்கத்தை ராஜபுத்திரர்களிடம் இருந்து முஸ்லீம் சுல்தான்களுக்கு மடைமாற்றம் செய்த போர். டெல்லியை ஆண்ட கடைசி ராஜபுத்திரன் பிருத்விராஜ் என்ற சரித்திர பக்கத்தின் முடிவு. தங்களுக்குள் சண்டையிட்டாலும், சுமார் 800 ஆண்டுகள் டெல்லியை முஸ்லீம் சுல்தான்கள் கட்டியாள்வதற்கு வித்திட்ட நிகழ்வு.
முதல்போரில் வாங்கிய மரண அடி முகமது கோரியின் நெஞ்சில் அணையாத நெருப்பாக எரிந்து கொண்டிருந்தது. அதே நேரம் ஏற்கனவே உதைவாங்கிச் சென்றவன் தானே, இப்போது என்ன செய்து விடப்போகிறான் என்கிற பாணியில் பிருத்விராஜின் பார்வை இருந்தது. அதற்கு இன்னொரு காரணம் பிருத்திவராஜின் படை வலிமை. இந்த முறையும் பிருத்திவிராஜ், கோரியை விட பெரும் படையுடன் வந்திருந்தான்.

ஆனால் கோரியோ ஏற்கனவே கிடைத்த தோல்வியில் இருந்து பாடம் கற்றவனாக, அடைந்தால் இந்துஸ்தான் இல்லாவிட்டால் கப்ரஸ்தான் என்ற முடிவில் வந்திருந்தான். வரலாற்று ஆய்வாளர் பரிஷ்டாவின் கூற்றுப்படி, 3000 யானைகள், 3 லட்சம் காலாட் படை மற்றும் குதிரைப்படையை பிருத்விராஜ் வைத்திருந்தார். கோரியின் அரசவை வரலாற்றறிஞர் மின்ஹாஜ் இ சிராஜின் கூற்றுப்படி, முகமது கோரி அதில் பாதி படைகளையே வைத்திருந்தான். கோரியின் படையில், 1 லட்சத்து 20 ஆயிரம் கவச வீரர்கள், 40 ஆயிரம் பேர் அடங்கிய சிறப்பு குதிரைப்படை இருந்தது.மீண்டும் அதே களத்தில் போர் தொடங்கியது. பிருத்விராஜின் படைகளை நேரடியாகத் தாக்கி வெல்வது கடினம். காரணம் அவர்களது எண்ணிக்கை. எனவே கோரி தனது திட்டத்தை செயல்படுத்தினான். படையை 5 பிரிவுகளாக பிரித்தான். பிருத்விராஜ் படைகளை பின்னால் இருந்தும், பக்கவாட்டில் இருந்தும் சுற்றி வளைத்து தாக்குமாறு, 4 பிரிவுகளுக்கு உத்தரவிட்டான். அவர்கள் தாக்க வந்தால், பின்வாங்கி விடுமாறும் உத்தரவிட்டான்.அது அப்படியே நடந்தது. தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டதால், பிருத்விராஜின் யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை சோர்வடைந்தது. இதனை பயன்படுத்தி தயார் நிலையில், இருந்த 5வது படைப்பிரிவை, பிருத்விராஜ் படையின் மையப்பகுதியில் செலுத்தினான். இதனால் பிருத்வியின் படைகள் சிதறுண்டன. பிருத்விராஜின் தளபதி காண்டே ராவ் கொல்லப்பட்டார். பிருத்விராஜ் போர்களத்தில் இருந்து தப்ப முயன்றபோது, பிடிபட்டு கொல்லப்பட்டார். ஆனால் பிருத்விராஜின் கண்களை பறித்து, சிறைபடுத்தியது போலவும், பிருத்விராஜ் கோரியை கொன்றது போலவும் சாம்ராஜ் பிருத்விராஜ் படத்தில் திரித்து காட்டப்பட்டிருக்கும்.

இதே போல், அரசவை கவிஞராக சந்த் பர்தாய் அதாவது பட் என்ற பெயரில் சோனுசூட் நடித்திருப்பார். உண்மையில் இப்படிப்பட்ட கேரக்டர் பிருத்விராஜ் உயிருடன் இருந்தபோது, வாழவில்லை என வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த போரில் படை வலிமை வெற்றியை கொடுக்கவில்லை. மூளை வலிமை வெற்றியை கொடுத்தது. இந்த வெற்றி பல முஸ்லீம் சுல்தான்கள் 800 ஆண்டுகளுக்கு மேல் இந்துஸ்தானத்தை ஆட்சி செய்ய வழிவகை செய்தது.முகமது கோரி டெல்லியின் மீது படையெடுத்ததை போல், இதே பிருத்விராஜன், பண்டல்கண்ட் மீது அதற்கு முன்பு படையெடுத்துள்ளான் என்பதும் வரலாற்று உண்மை.எனவே எல்லா மன்னர்களும் நாடு பிடிக்கும் ஆசையுடனேயே இருந்தனர். அதற்கு பல நியாயமான அல்லது நியாயமற்ற காரணங்கள் இருக்கலாம். அதனை தற்போது நியாயப்படுத்தி, அல்லது குற்றப்படுத்தி மக்களிடம் பிளவுகளை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகவே இந்த வரலாறு பதிவு.