எங்களை ஒன்றும் செய்து விட முடியாது! டிரம்புக்கு சவால் விடுத்த சர்வதேச நீதிமன்றம்!

போர்க்குற்றவாளி பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. முன்னதாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்காவும், இஸ்ரேலும் வெளியேறின. இந்நிலையில், ஐசிசி எனப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகாரிகளுக்கு எதிராக தடை உத்தரவுகளை டொனால்டு டிரம்ப் பிறப்பித்தார்.இதற்கு சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் கடும் பதிலடி கொடுத்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு அஞ்ச மாட்டோம் என்றும் தொடர்ந்து உலகத்திற்கு நீதியையும், நம்பிக்கையையும் தருவோம் என அந்த நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கையை வன்மையாக கண்டித்துள்ள ஐசிசி, இந்த நடவடிக்கைகள் மூலம் சுதந்திர மற்றும் பாரபட்சமற்ற நீதித்துறை நடவடிக்கைகள் பாதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.உலகம் முழுவதும் அநீதியால் பாதிக்கப்பட்ட மக்களின் பக்கமும், நீதியை நிலைநாட்டும் தங்களது அதிகாரிகளின் பக்கமும் உறுதியுடன் நிற்போம் என ஐசிசி அறிவித்துள்ளது.மனித உரிமைகளையும், நீதியையும் நிலை நாட்ட வேண்டும் என ஐசிசியின் 125 உறுப்புநாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கிறோம் என சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.