இறுதித் தொழுகை! தேதி அறிவிப்பு!

காசாவில் பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வந்த கொடூர இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரானின் ஆதரவு பெற்ற லெபனானின் போராட்டக்குழுவான ஹிஸ்புல்லா களத்தில் இறங்கியது. ஆரம்பம் முதலே ஹிஸ்புல்லாவின் பதிலடிகளை சமாளிக்க முடியாமல் இஸ்ரேல் திணற ஆரம்பித்தது.இதையடுத்து இஸ்ரேலின் பார்வை காசாவிற்கு அடுத்தப்படியாக லெபனான் மீது திரும்பியது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி அன்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லாவின் தலைமையகத்தைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.இந்த தாக்குதலில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஹிஸ்புல்லாவின் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய ஹசன் நஸ்ருல்லா கொல்லப்பட்டார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டது.அப்போது லெபனான் – இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்திருந்தது.

நஸ்ரல்லாவிற்கு இறுதிச்சடங்கு நடத்தினால் பிரம்மாண்டமான கூட்டம் கூடும், இதனைப் பயன்படுத்தி இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களை கொல்லக்கூடும் என ஹிஸ்புல்லா முன்பே கணித்தது.எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக ஹசன் நஸ்ருல்லாவின் உடல், தற்காலிகமாக ரகசிய இடத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டது. 2024ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நிறுத்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. தெற்கு லெபனானிலிருந்து வெளியேற இஸ்ரேலிய ராணுவத்துக்கும் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் 60 நாள் அவகாசம் வழங்கப்பட்டது. இந்தக் கால அவகாசம் பிப்ரவரி 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதனிடையே தற்போது லெபனானில் இறுதித் தொழுகை மற்றும் நல்லடக்கத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஹசன் நஸ்ருல்லாவின் உடல் பிப்ரவரி 23ஆம் தேதியன்று அடக்கம் செய்யப்படும் என ஹிஸ்புல்லா அமைப்பின் தற்போதைய தலைவர் நயீம் காசிம் அறிவித்துள்ளார்.பிரம்மாண்டமான இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்றும் அதில் பெரிய அளவிலான பொதுமக்கள் ஊர்வலமாகச் செல்வர் என்றும் காசிம் தெரிவித்தார்.நஸ்ருல்லா மரணத்தைத் தொடர்ந்து ஹெஸ்புல்லாவின் அடுத்த தலைவராக சஃபிதீன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்பே சஃபிதீன் கொல்லப்பட்டார். இந்த இறுதிச்சடங்கின் போது சஃபீதீன் பொதுச் செயலாளர் பட்டத்துடன் அடக்கம் செய்யப்படுவார் என ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது.நஸ்ரல்லாவின் உடல் பெய்ரூட்டின் புறநகர்ப் பகுதியில் பழைய மற்றும் புதிய விமான நிலைய சாலைகளுக்கு இடையில் தேர்வு செய்யப்பட்ட நிலத்திலும், சஃபீதீன் தெற்கு லெபனானில் உள்ள அவரது சொந்த ஊரான டெய்ர் கானூனில் அடக்கம் செய்யப்படவுள்ளது.