லெபனானின் ஹிஸ்புல்லா போராட்டக்குழுவின் ட்ரோன் தாக்குதல்களைக் கண்டு அஞ்சி இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு நிரந்தரமாக பதுங்கு குழியில் தஞ்சமடைந்துள்ளார்.
லெபனானின் பதிலடியை தாக்குப்பிடிக்க முடியாமல் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் நாளுக்கு நாள் திணறி வருகின்றன. குறிப்பாக ஹிஸ்புல்லா போராட்டக்காரர்களின் ட்ரோன் தாக்குதல் ஆக்கிரமிப்பு படைகளை சிதறடித்து வருகிறது. மற்றொருபுறமும் ஈரானும் இஸ்ரேலுக்கு எதிராக ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இப்படி இரு தலைக்கொள்ளி எறும்பாக சிக்கலில் சிக்கிக்கொண்ட இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு, உயிருக்கு அஞ்சி பதுங்கு குழிக்குள் தஞ்சம் புகுந்துள்ளராம். இதனை அந்நாட்டு ஊடகங்களே செய்தியாக வெளியிட்டுள்ளன.
பாதுகாப்பு காரணங்களுக்காக இஸ்ரேல் ராணுவ அதிகாரிகளின் அறிவுறுத்தலின் படி தனது அலுவலகத்திற்கு கீழே உள்ள பதுங்கு குழியில் இருந்து தான் அன்றாட அலுவலக பணிகளைக் கூட நெதன்யாகு செய்து வருகிறாராம். இதற்கு முன்னதாக “மீன் தொட்டி” என்று அழைக்கப்படும் குண்டு துளைக்காத பாதுகாப்பு கண்ணாடிகள் பொருத்தப்பட்ட தனது மேல் தள அறைகளில் இருந்து நெதன்யாகு தனது அன்றாட பணிகளைக் கவனித்து வந்தார்.
கடந்த அக்டோபர் மாதம் சிசேரியாவில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே ஹிஸ்புல்லா நடத்திய ட்ரோன் தாக்குதலில் அவரது படுக்கையறை ஜன்னல்கள் சுக்கு நூறாக உடைந்து சிதறியது. தனைப் பார்த்து கதிகலங்கிப் போனவர், பாதுகாப்பு அறையை விட்டு பதுங்கு குழிக்கு தனது அலுவலகத்தை மாற்றிக் கொண்டுள்ளார். மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளால் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு கூட நேரில் ஆஜராக முடியாத அளவிற்கு அச்சத்தில் உள்ளார். ஏனெனில் பாதுகாப்பு அதிகாரிகள் நிலையான பாதுகாப்பு அம்சம் இல்லாத அறைகளில் தங்க வேண்டாம் என எச்சரித்திருப்பதால், நீதிமன்றத்திற்கு நேரில் ஆஜராவது பாதுகாப்பானதாக இருக்காது என முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.






