பாகிஸ்தானில் களைக்கட்டிய தீபாவளி கொண்டாட்டம்; வைரல் வீடியோ!

Diwali in Pakistan

பாகிஸ்தானின் கராச்சியில், மக்கள் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தீபங்களின் பண்டிகை என்று அழைக்கப்படும் இந்து பண்டிகையான தீபாவளி இந்த ஆண்டு உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களால் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஆனால் பாகிஸ்தானில் வசிக்கும் இந்துக்கள் பிறநாடுகளில் வசிக்கும் இந்துக்களைப் போல் தீபாவளி போன்ற பண்டிகையை சிறப்பாகவும், நிம்மதியாகவும் கொண்டாட முடிவதில்லை என சிலர் குற்றச்சாட்டி வந்தனர்.

தற்போது அது உண்மையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், பாகிஸ்தானைச் சேர்ந்த சோசியல் மீடியா இன்புளூயன்ஸர் ஒருவர் பகிர்ந்த வீடியோ வைரலாகி வருகிறது. பிலால் ஹாசன் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், கராச்சியில் உள்ள நாராயணன் சுவாமி கோயிலுக்கு முன்பாக மக்கள் ஆனந்தமாக தீபாவளியைக் கொண்டாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அந்த வீடியோவில் அனைவரும் தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பட்டாசுகளை வெடிக்கிறார்கள். மேலும் சிரிப்பு மற்றும் உற்சாகம் நிறைந்த ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலையை காண முடிகிறது. சமூக நல்லிணக்கத்தை பறைசாற்றும் இந்த வீடியோ இந்திய நெட்டிசன்களிடையே கொண்டாடப்பட்டு வருகிறது.