காசா மக்களை அங்கிருந்து யாராலும் வெளியேற்ற முடியாது, என்றும் அதனை துருக்கி அனுமதிக்காது என அந்நாட்டின் அதிபர் தையிப் எர்டோகான் தெரிவித்துள்ளார்.செய்தியாளர் கூட்டத்தில் பேசிய எர்டோகன், பாலஸ்தீனிய மக்களை அவர்களது தாயகத்திலிருந்து வலுக்கட்டாயமாக அகற்றும் எந்தவொரு திட்டத்தையும் துருக்கி உறுதியாக எதிர்க்கிறது என்பதை தெளிவுபடுத்தினார்.”எங்கள் கண்ணோட்டத்தில், சியோனிச லாபியின் அழுத்தத்தின் கீழ் டிரம்ப் இந்த கருத்தை தெரிவித்துள்ளதாகவும், காசா தொடர்பாக புதிய அமெரிக்க நிர்வாகம் கொண்டு வந்த திட்டங்களைப் பற்றி பேச எதுவும் இல்லை” என்று கூறினார்.

“இந்த திட்டம் முற்றிலும் பயனற்றது… காசா மக்களை அவர்களின் தாயகத்திலிருந்து அகற்ற யாருக்கும் அதிகாரம் இல்லை. காசா மக்கள் தொடர்ந்து காசாவில் தங்குவார்கள், காசாவில் வாழ்வார்கள், காசாவைப் பாதுகாப்பார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
பாலஸ்தீனியர்களை அவர்களின் உரிமை நிலத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முயற்சி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை வலுப்படுத்த மட்டுமே உதவும் என்றும் வெளிநாடுகளில் திணிக்கப்பட்ட தீர்வுகளை பிராந்திய ரீதியாக நிராகரித்து வரும் நிலையில் துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.சிரியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதன் மூலம் துருக்கி மீண்டும் வளைகுடா பிராந்தியத்தில் முக்கிய சக்தியாக உருவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.






Leave a Reply