லெபனானில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இஸ்ரேல், காசாவில் மட்டும் அதனை அமல்படுத்த மாட்டேன் என அடம்பிடித்து வருகிறது. இதற்கு மத்திய கிழக்கு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இருப்பினும், காசாவில் நாளுக்கு நாள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளின் கொடூர தாக்குதல் தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே காசாவை கைவிடமாட்டோம் என ஹெஸ்புல்லா தெரிவித்திருந்த நிலையில், இஸ்ரேலுக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஏமனின் ஆயுதப்படையான ஹவ்தி திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது.
ஈராக் போராளிகள் குழுவுடன் இணைந்து ஏமன் படை, ஆக்கிரமிக்கப்பட்ட தெற்கு பாலஸ்தீனத்தில் அதிரடி தாக்குதலைத் நடத்தியதாக ஏமன் ஆயுதப்படையின் செய்தித் தொடர்பாளரான பிரிகேடியர் ஜெனரல் யாஹ்யா சாரி தெரிவித்துள்ளார். காசா மீதான போரைக் கைவிடாத வரை தங்களது கூட்டு நடவடிக்கை தொடரும் என இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கு யாஹ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த டிசம்பர் 3ம் தேதி முதல் தொடர்ந்து 48 மணி நேரத்திற்கு இஸ்ரேலின் முக்கிய ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளைக் குறிவைத்து ஹவ்தி மற்றும் ஈராக் கூட்டுப்படை ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. பாலஸ்தீனத்தில் உள்ள உம் அல்-ரஷ்ராஷ் பகுதியில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படை மீதும், கட்டமைப்புகள் மீது பலமுறை ட்ரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. அதேபோல் ஆக்கிரமிக்கப்பட்ட யாஃபா பகுதியில் பாலஸ்தீன டைப் 2 ஹைப்பர்சோனிக் ஏவுகணைக்களைக் கொண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஏமன் ஹவ்திகளின் கடற்படை தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறி வரும் இஸ்ரேலுக்கு, ஹவ்தி மற்றும் ஈராக் கூட்டுப்படையின் தரைவழித் தாக்குதல்கள் மிகப்பெரிய நெருக்கடியாக மாறியுள்ளது.






Leave a Reply